microsoftவரும் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக தேர்தல் துறை கைகோர்க்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழக தேர்தல் துறையில் ஆன்லைன் முறையின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்தல், வேட்பாளர்கள் கூட்டங்களுக்கான அனுமதி பெறுதல் உள்ளிட்ட சேவைகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக தேர்தல் அதிகாரியின் இணையதளத்தை, தேசிய தகவல் நிறுவனம் (என்ஐசி) பராமரித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் துறையில் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துவதற்காக தற்போது, எல்காட் மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக தேர்தல் துறை கைகோர்த்துள்ளது. இனி, தமிழக தேர்தல் துறையின் இணையதளம், தொழில்நுட்ப சேவைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நேரடி பராமரிப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விரைவில் பராமரிப்புப் பணிகள் ஒப்படைக்கப்படும்’ என்று கூறினார். மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் தொலைபேசி மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் சில தொகுதிகளில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாகவும் அவ்வாறு அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்தால் அதற்கான செலவு சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கோடைக் காலங்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நீர்மோர் பந்தல்கள் அமைத்தால் அங்கு கொடி, பேனர், ஸ்டிக்கர் என கட்சி அடையாளங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும் நீர்மோர் பந்தல்களில் இருப்பவர்கள் எந்தவொரு கட்சியையும் அடையாளப்படுத்தும் கரைவேட்டிகளை அணிந்திருக்கக் கூடாது என்றும் அரசு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கக் கூடாது என்றும் அவர் மேலும் மேலும் கூறினார்.

மேலும் வேட்புமனு, பிரமாணப் பத்திரம், கூடுதல் பிரமாணப் பத்திரம் ஆகியவற்றை கண்டிப்பாக தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் வேட்பு மனு, பிரமாண பத்திரத்தில் எந்த வொரு பகுதியையும் பூர்த்தி செய்யாமல் காலியாக விடக் கூடாது என்றும் வேட்பாளருக்கான உறுதிமொழி கண்டிப்பாக எடுத்து, வேட்புமனுவுடன் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

English Summary: State Election Commission accompanied with Microsoft.