மாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) லெவன் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

திண்டுக்கல் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் சென்னை, கோவை, நீலகிரி, சிவகங்கை, திருவள்ளூர் உட்பட 10 மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.

சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சிட்டி எப்.சி. அணி, தமிழ்நாடு கால்பந்து சங்க(டிஎப்ஏ) லெவன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டி தொடரின் சிறந்த வீரராக சென்னை சிட்டி எப்.சி.. அணியின் சூசைராஜும், சிறந்த கோல் கீப்பராக தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) அணியை சேர்ந்த சோனேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்வி வளர்ச்சி இயக்குநர் எம்.ராஜியக்கொடி, வெற்றி பெற்ற சென்னை சிட்டி எப்.சி. அணிக்கு ரூ.20,000 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார். இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) அணிக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட கால்பந்துக் கழகத் தலைவர் ஜி. சுந்தர்ராஜன், செயலர் சண்முகம், துணைத்தலைவர் கே.ரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

English Summary: State Level Football Meet: Chennai City F.C got the Championship.