தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி கட்டணங்கள் வசூல் செய்வதில்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக, குறிப்பாக பெரிய ஸ்டார்கள் படம் ரிலீஸ் ஆகும்போது மிக அதிகளவிலான கட்டணங்கள் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்யப்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பலமுறை தமிழக அரசுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த அந்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பெரும் தொகை அதிகமாக வசூலிக்கின்றனர். கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தியேட்டர் உரிமையாளர்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்து தமிழக அரசுக்கு பல முறை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரர் 4 புகார்கள் அனுப்பியுள்ளார். அதில் ஒரு புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீதமுள்ள 3 புகார்கள் பொய்யானவை’ என்று கூறினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து புகார்களுமே உண்மையானது என்று வாதிட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘ஒருவர் புகார் அனுப்பினால்தான் சம்பந்தப்பட்ட தியேட்டர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஏன் அதிகாரிகளே நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகம் முழுவதும் தியேட்டர்களின் கூடுதல் கட்டணம் வசூலிக் கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும், அந்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுக்களை 3 வாரத்துக்குள் தமிழக அரசு உருவாக்கவேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் முன்பு புகார் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த தொலைப்பேசி எண் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் விதமாக அனைத்து தியேட்டர்கள் முன்பும் மிகப்பெரிய விளம்பர பலகையில் எழுதியிருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த நடவடிக்கை அனைத்தும் 3 வாரத்துக்குள் செய்து முடித்து, அதுதொடர்பான அறிக்கையை இந்த ஐகோர்ட்டுக்கு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
English Summary: State theaters to raise more fees? Special Committee to take action.