வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்தின், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்குமான இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் நடத்தை விதி மீறல்களைக் கண்காணிக்கும் வகையில், சென்னை மாவட்டத்தின் 15 மண்டலங்களில் 48 பறக்கும் படைக் குழுக்களும், 16 விடியோ கண்காணிப்புக் குழுக்களும், 48 நிலைக் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 18,83,989 பேரும், பெண் வாக்காளர்கள் 19,34,078 பேரும், திருநங்கைகள் 932 பேரும் என மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர். 3,754 வாக்குச் சாவடிகளும், 76 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 24,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 10,791 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய 6,618 இயந்திரங்களும், 5,997 கட்டுப்பாட்டுக் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனு தாக்கல் செய்ய 4 இடங்கள்: வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுதாக்கல் செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது.
வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு, அடையாறில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு ஷெனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கு, பெரம்பூரில், சர்மா நகரில் உள்ள சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திலும் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை பெறப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர். வேட்பு மனு தாக்கல் நடைபெறும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.