சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நாளை முதல் நீராவி என்ஜின் ரயில் இயக்கப்படுகிறது.
சுற்றுலா தலங்கள் அதிகமாக கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியை காண தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அந்த வகையில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே சுற்றுலாப் பயணிகளுக்காக பழமையான நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ஹெரிடேஜ் ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திட நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் “ஹெரிடேஜ் ரயில்’ என்றழைக்கப்படும் பாரம்பரிய ரயில் பயணம் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இங்கிலாந்தில் 1855ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இவை மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட கோட்டங்களில் இயங்கி வந்த இந்த ரயில், நாளை முதல் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயக்கப்பட உள்ளது.
இதற்காக, சில நாள்களுக்கு முன்பு பழமையான நீராவி என்ஜின் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 40 பேர் அமரும் வகையில் முழுவதும் குளிர்சாதன வசதி அமைக்கப்பட்ட ஒரு பெட்டி இணைக்கப்படுவதாகவும், நாகர்கோவில் – கன்னியாகுமரி சுற்றுலா பயண கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பழைய நீராவி என்ஜின் ரயில், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் கம்பீரமாக உள்ளது.