சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்தும் மகராஷ்டிரா அரசு மாட்டு இறைச்சிக்குத் தடை விதித்தது குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக இந்த அமைப்புக்கான அங்கீகாரத்தை சென்னை ஐஐடி கடந்த மே 15ஆம் தேதி ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அமைப்புகள் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் ஐஐடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவர் அமைப்பு மீதான தடை நடவடிக்கைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சென்னை ஐஐடி-க்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் பெரிய அளவில் முற்றி வருவதால் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட அமைப்பிற்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க சென்னை ஐஐடி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் ஐஐடி இயக்குநரை (பொறுப்பு) நேற்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்துக்கு மறு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக ஐஐடி டீன் (மாணவர்) நிபந்தனனயற்ற மன்னிப்பு கோர வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 19(ஏ)-க்கு எதிராக எடுக்கப்பட்ட ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஐஐடி-யில் செயல்படும் அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் அளிக்க வேண்டும். ஐஐடி அலுவலக மின்னஞ்சல் முகவரி, அரங்குகள், கூட்டரங்குகளைப் பயன்படுத்துவதற்கான சம உரிமை மாணவர் அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை மாணவர் அமைப்பு முன்வைத்தது.
அப்போது இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் அவசர மாணவர் வாரிய (பி.ஒ.எஸ்.) கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பாக முடிவெடுக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர் அமைப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு ஐஐடி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Students Association Problem in Chennai IIT comes to end Quickly, Chennai IIT Director.