artsscience3516கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிப்பை நோக்கியே பெரும்பாலும் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலை மாறியுள்ளது. பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்துள்ளதாலும், புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்ட காரணத்தாலும் மீண்டும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. எந்த வேலைக்கு சென்றாலும் ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதும் என்று கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் கூறுவதாலும் மேற்படிப்புகளுக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் டிகிரியே உதவுவதாலும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வாங்க மாணவ மாணவிகள் குவிந்து வருகின்றனர்.

கலை அறிவியல் கல்லூரிகளில் நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளே பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூட்டம் அலைமோதியது. முதல் நாளில் கடந்த ஆண்டுகளை விட 25 சதவீதம் கூடுதலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்புகள் குறைந்தது, மென்பொருள் நிறுவனங்களின் ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து, கலை – அறிவியல் படிப்புகள் பக்கம் திரும்பியது. குறிப்பாக, சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத், மாநிலக் கல்லூரி ஆகிய அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அதுபோல எழும்பூர் எத்திராஜ் கல்லூரி, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி போன்ற தனியார் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

முதல் நாள் விண்ணப்ப விநியோகம் குறித்து சென்னை காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கே.சீதாலட்சுமி கூறியதாவது: விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. முதல் நாளான நேற்று 2,696 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 600 கூடுதலாகும்’ என்று கூறினார்.

ராணி மேரிக் கல்லூரி முதல்வர் அக்தர் பேகம் கூறியதாவது:- முதல் நாளில் 1,300 விணணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதல் என்றும் சென்னை மாநில கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாள் அவர்கள் நேற்றைய முதல் நாளில் 650 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும் கூறினார். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்ப விநியோகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Students Crowd in Arts & Science Colleges of any year.