சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவிகள் இன்று திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நேற்று முன் தினம் கண் சிகிச்சை பெற வந்த ஒரு பெண், சிகிச்சைக்கு பின்னர் உடனே தனது குழந்தைக்கு பால் கொடுத்ததால் அந்த குழந்தை இறந்து விட்டது. குழந்தையின் மரணத்திற்கு டாக்டர்கள்தான் காரணம் என்று கூறி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ட செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பேபி வசுமதி அவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவிகளை அவமரியாதையாக நடத்தியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா பட்ட மேற்படிப்பு மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், மாணவிகள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ பட்ட மேற்படிபு மாணவி ஒருவர் கூறும்போது, “மருத்துவமனை இயக்குநர் எங்களை குற்றவாளிகளைப்போல வரிசையாக நிற்கவைத்து, பெண்ணின் உறவினரை அழைத்து அடையாளம் காட்டச் சொல்லி அவமானப்படுத்திவிட்டார். எங்களுக்கு இங்கு போதிய பாதுகாப்பு இல்லை. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக பிரசவம் பார்ப்பது, சிகிச்சை அளிப்பது என அனைத்து பணிகளையும் நாங்கள்தான் செய்கிறோம். எங்களை அவமானப்படுத்திய மருத்துவமனை இயக்குநர் மன்னிப்பு கேட்கவேண்டும். அவரை பணியிட மாற்றம் செய்யவேண்டும். அதுவரை எங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்’ என்று கூறினார்.
இந்த பிரச்சினையை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கொண்டுசெல்ல இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதாலட்சுமி, டீன் டாக்டர் ஆர்.விமலா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
English Summary: Students goes sudden strike in Egmore Maternity Hospital.