கோடை கால விடுமுறையில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வர். இதன்படு சுற்றுலா செல்பவர்களுக்கு வசதியாக தென்னக ரெயில்வே 33 கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளது. பயணிகளின் தேவையை பொறுத்து மேலும் இந்த சிறப்பு ரெயில்கள் அதிகரிக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது போலவே கோடைகாலத்திலும் பல்வேறு இடங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளுக்கு பெரும்பாலும் மே முதல் வாரத்தில் இருந்து விடுமுறை அளிக்கப்படும். எனவே அவர்கள் தங்களது விடுமுறை காலத்தை தங்களுடைய சொந்த ஊரில் உற்றார், உறவினர்களுடன் கழிக்க விரும்புவார்கள். மேலும், சிலர் கோடைகாலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு குடும்பத்துடன் சென்று ஓய்வு எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு கோடைகாலம் ஆரம்பிக்கும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை கோடை கால சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே ஆண்டு தோறும் இயக்கி வருகிறது.
அதன்படி, ஏப்ரல் 1-ந் தேதி முதல் சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 33 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் விடுமுறை காலம் ஆரம்பிக்காததால் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட இருக்கின்றன. மேலும், மே 16-ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதையொட்டி தங்களுடைய சொந்த ஊரில் வாக்களிக்க இருப்பவர்கள் செல்ல இருப்பதால் ரெயில்களில் கூட்டம் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் போன்றே கோடைகாலத்திலும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 1-ந் தேதி முதல் கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று (நேற்று முன்தினம்) வரை 33 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களின் எண்ணிக்கை மே (அடுத்த மாதம்) மற்றும் ஜூன் மாதங்களில் மேலும் அதிகரிக்கப்பட உள்ளன. தற்போது அனைத்து சிறப்பு ரெயில்களிலும் கூட்டம் கணிசமாகவே உள்ளது. இருப்பினும் வரும் காலங்களில் (மே மற்றும் ஜூன்) பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English summary : Summer holidays and 33 special trains to the elections. Southern Railway Announcement