சென்னை: கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு இயல்பாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
நாடு முழுவதும் குளிர்காலம் படிப்படியாக முடிவுக்கு வந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் ஹிமாச்சல் பிரதேசம் அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் லேசான குளிரும் மழையும் நிலவுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் பரவி தீவிரம் அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வானிலை ஆய்வு மைய கணக்கின்படி மார்ச், 1ல் கோடை வெயில் காலம் துவங்கி மே மாதம் முடியும். அதன்பின் இந்தியாவின் முக்கிய மழை ஆதாரமான தென் மேற்கு பருவமழை காலம் துவங்கும். இதன் அடிப்படையில் நேற்று முதல் கோடை வெயில் காலம் துவங்கியுள்ளது.
இந்த ஆண்டு கோடை வெயில் எப்படி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் நீண்டகால கணிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த கணிப்பின்படி தமிழகம் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கோடை வெயிலின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் அளவிலேயே இருக்கும்; பெரிய மாற்றம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், வெயில் அளவு, வழக்கத்தை விட 1 டிகிரி அதிகம் இருக்கும் என, வானிலை மையம் கணித்துள்ளது. டில்லி தெலுங்கானா ஆந்திரா தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கோடையில் எந்த பகுதிகளில் வெப்ப அலைகள் ஏற்படுமோ அந்த பகுதிகளில் வழக்கமான வெப்ப தாக்கம் இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் வழக்கமாக பதிவாகும் வெயிலின் அளவை விட கோடையில் கூடுதலாக 1 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் அதிகரிக்கும். கடல் தட்ப நிலையை பொறுத்த வரை மழை காலத்துக்கு சாதகமான, ‘எல் நினோ’ வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதிக மழை எங்கே?: நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, தமிழகத்தின் சில இடங்களில் கணிசமான அளவுக்கு மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சங்கரன்கோவிலில், 5 செ.மீ., பதிவானது. சிவகிரி, 4; ஸ்ரீவில்லிபுத்துார், 2; ஆய்க்குடி, ஏற்காடு, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ‘தமிழகம், புதுச்சேரியில், இன்று சில இடங்களில் மழை பெய்யும்; நாளை முதல் வறண்ட வானிலை நிலவும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.