தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் செய்து கொண்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர், மாணவியர், இளைஞர்களுக்கு வாக்களிக்கும் கடமையையும் அவசியத்தையும் புரிந்து கொள்ளும் வண்ணம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் சென்னை வேப்பேரி பகுதியில் உள்ள சாந்தி குருஜெயின் மகளிர் கல்லூரியில் ‘கோலம்’ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. “Vote for Right’ என கல்லூரி மாணவிகள் கோலமிட்டு அசத்தினர். இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். மாணவிகள் அனைவரும் தங்களது வாக்குகளை அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ பிரசார வாகனத்தை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தொடங்கி வைத்தார். இந்த வீடியோ வாகனம் சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுப்பதிவின் அவசியத்தை அளிக்கும். நேர்மையான ஓட்டுப்பதிவு, பணத்துக்காக ஓட்டை விற்க கூடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் ஆகியவை குறித்து எல்.இ.டி. வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தேர்தல் வீடியோ படக்காட்சியில் நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்த பிரசார வாகனம் காலை முதல் இரவு வரை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் கூறியதாவது
தேர்தல் விழிப்புணர்வு வீடியோ பிரசார வாகனம் பொதுமக்கள் கூடக்கூடிய மார்க்கெட், வணிக வளாகம், பூங்கா போன்ற பகுதிகளுக்கு தினமும் சென்று அங்கு வீடியோ படம் ஒளிபரப்பப்படும். ஒரு தொகுதிக்கு 4 மாதிரி வாக்கு சாவடிகளும், ஒரு மகளிர் வாக்கு சாவடியும் அமைக்கப்படும். இதனை அமைக்க இடங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு அண்ணாநகர் தொகுதியில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால் பணிகள் தொய்வு இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது’ என்று அவர் கூறினார்.
தேர்தல் விதிமுறைகளின் படி பணப் பரிவர்த்தனையும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வங்கிகளில் பணம் அதிகளவு பரிமாற்றம் செய்யப்படுவது குறித்து வங்கி அதிகாரிகளிடம் தேர்தல் அதிகாரி சந்திரமோகன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளும், தனியார் வங்கி அதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என அவர்களிடம் தேர்தல் அதிகாரி சந்திரமோகன் அறிவுறுத்தினார்.
English Summary: Surya-Dinesh Karthik’s in the election campaigns of awareness at Chennai.