தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலிடம், தா”ம்பரம் – திருநெல்வேலி தினசரி அந்தியோதயா ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்ததையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த ரயில் நாகர்கோவிலிலிருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்துக்கு செல்லும். மறுமார்க்கத்தில் தாம்பரத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக மறுநாள் பிற்பகல் 2.45 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெறும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.