சென்னையில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் கணித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் எழுத்துருவியல் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓலைச் சுவடி முதல் கையடக்கச் சாதனங்கள் வரை தமிழ் வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சி, மேற்கத்திய எழுத்துருவியலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், ஆப்பிள், ஆண்ட்ராய்டு சாதனங்களில் தமிழ் எழுத்துருவியலின் அனுபவங்கள், அச்சு ஊடகத்தில் எழுத்துரு பிரச்னைகள், காட்சி திரைச் சாதனங்களில் எழுத்துரு பிரச்னைகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
இந்த மாநாடு குறித்து கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சொ.ஆனந்தன் அவர்கள் கூறியபோது, “படிப்பெளிமை என்கிற விஷயம் சிறிய காட்சித் திரை கொண்ட கையடக்கச் சாதனங்களின் பயன்பாடு பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் எழுத்துருவியலைப் பொருத்தவரை தொழில்நுட்ப வளர்ச்சியுடன் உறவோ, முறைப்படுத்தப்பட்ட ஆய்வுகளோ இதுவரை இல்லை. தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்தவும், புதிய எழுத்துருக்களை உருவாக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. “ஐபேட்’, “கிண்டில்’ போன்றவற்றில் இ-புக் உள்ளிட்டவற்றை படிப்பதற்கு ஏற்ற வகையில் ஆங்கில எழுத்துருக்கள் உள்ளன. தமிழிலும் அத்தகைய சாதனங்களுக்கு ஏற்ற எழுத்துருக்களை உருவாக்க இந்த மாநாடு உதவும் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் குவாஹாட்டி ஐஐடி பேராசிரியர் டி.உதயகுமார் கலந்து கொள்ள உள்ளார். இவர் இந்திய அரசின் ரூபாய் நாணய சின்னத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்போன்களில் தமிழ் உலா வர முக்கியமானவர்களில் ஒருவரான மலேசிய நாட்டைச் சேர்ந்த முரசு அஞ்சல் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் முத்து நெடுமாறன், பன்மொழி மென்பொருளான ஸ்ரீலிபி தயாரிப்பு நிறுவனமான புணே மாடுலர் இன்போடெக் நிறுவனத்தின் தலைவர் கே.என்.கூப்பர், மும்பையில் உள்ள ஐஐடி பேராசிரியர் ஜி.வி.ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம்.
இந்த மாநாடு குறித்து மேலும் தகவல் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் kanithamizh.in என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் கணித்தமிழ்ச் சங்கம், 2-ஆவது மாடி, 421, அண்ணா சாலை, சென்னை-18 என்ற முகவரியில் தொடர்பு கொண்டும் 044-24355564 செல்லிடப்பேசி: 9444075051 ஆகிய எண்களை தொடர்புகொண்டும் இந்த மாநாடு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
English Summary : Tamil Conference in Chennai on October 17-18