சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவ மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சிறுபான்மையின மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006-ல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1-ல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006-ம் ஆண்டு முதல் 1-வது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும். அதன்படி படித்த அந்த மாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர்.
இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பலதடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பகுதி 2-ல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனுகொடுத்துள்ளார். அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.
அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே 2015-1016 கல்விஆண்டில் 10-வது வகுப்பு தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது.
இவ்வாறு த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
English Summary : Government orders Tamil as first language for Class !0 exam.