“தமிழ் ஜனம்” என்ற புதிய செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பின் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகூர், எல்.முருகன் ஆகியோர் துவங்கி வைத்தனர். தொலைக்காட்சியின் செயல்பாடுகள் குறித்து இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மது எடுத்துக் கூறினார். முன்னதாக ‘தமிழ் ஜனம்’ தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரி ரமேஷ் பிரபா அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக நிர்வாக ஆசிரியர் தில்லை நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ‘பிரதமர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் மொழியைத்தான் சிறப்பாக பேசி வருகிறார். தமிழர்களின் தொன்மையையும், நேர்மையான ஆட்சிக்கு சாட்சியாக விளங்கும் சோழர்களின் செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவி தமிழ் மண்ணுக்கு மோடி பெருமை சேர்த்து இருக்கிறார். ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மோடிதான் காரணம். ஐ.நா சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என பேசியவர் மோடிதான்’ என்றார்.
அனுராக் சிங் தாகூர், ‘மக்களாட்சியில் நான்காவது தூணாக விளங்கிவரும் ஊடகத்துறை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் செயல்படவேண்டும். காட்சி ஊடகங்கள் வருகைக்கு பிறகு அச்சு ஊடகங்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சோஷியல் மீடியாக்களில் வலம் வரும் போலி செய்திகளும், கற்பனையாக உருவாக்கப்படும் செய்திகளும் ஊடகங்களுக்கு சவாலாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி தங்களுடைய திட்டங்களாக மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது’ என்றார்.