கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என இரு பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதன்படி, ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது. மாணவர்கள் tnau.ucanapply.com மற்றும் tnagfi.ucanapply.com என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மை பல்கலையில் 14 இளங்கலை படிப்புகள், 3 டிப்ளமோ படிப்புகள் இருக்கிறது. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளம் அறிவியல் பாடங்கள், 3 தொழில் முறை பாடப்பிரிவுகள் இருக்கின்றன.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணம். மாணவர்கள் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் பல்கலையை தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவே அனைத்து மாணவர் சேர்க்கையும் நடைபெறும்.
வேளாண் பல்கலையில் உறுப்பு கல்லூரியில் 3,363 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 2,806 இடங்கள் என மொத்தம் 6,169 இடங்கள் இருக்கின்றன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 345 இடங்கள் உள்ளது. 57 சிறப்பு இட ஒதுக்கீடு இடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டு பி.டெக் பயோ இன்பர்மேட்டிக்ஸ், பி.டெக் அக்ரிகல்ச்சர் இன்பர்மேசன் என்ற இரு பாடப்பிரிவுகள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு போன்று கால்நடை படிப்புகளுக்கு தனியாக நுழைவு தேர்வு நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு கவுன்சலிங் இனி வேளாண் பல்கலைக்கழகத்திலேயே நடக்கும். இரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், ஆசிரியர்கள் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு. இரு பல்கலை கழகங்களையும் இணைக்கும் முடிவு இல்லை.
மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு மாணவர்கள் 0422- 6611345, 6611346, 94886-35077, 94864-25076 என்ற எண்ணிலும், நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைக்கழகத்தை 04365-256430, 94426-01908 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.