இம்மாதம் 16ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைந்தது. இந்த 6 நாட்களில் மொத்தம் 7 ஆயிரத்து 151 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஆண்கள் 6 ஆயிரத்து 352 பேர். பெண்கள் 795 பேர். திருநங்கைகள் 4 பேர்.
தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல் அதிகாரி மற்றும் மத்திய பார்வையாளர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டன. பெரும்பாலான மனுக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் முன்மொழியாதது, தேர்தல் கட்டணம் செலுத்தாதது என்பன உள்பட பல்வேறு காரணங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட மாற்று மனுக்கள் தானாகவே தள்ளுபடி ஆயின. அதன்படி 3 ஆயிரத்து 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 ஆயிரத்து 132 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் 336 பேர் போட்டியில் இருந்து விலக முடிவு செய்து வாபஸ் பெற்றதை அடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி 234 தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 794 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஆண்கள் 3 ஆயிரத்து 472 பேர். பெண்கள் 320 பேர். திருநங்கைகள் 2 பேர் ஆவார்கள். கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 பேரும், மயிலாடுதுறை, கூடலூர், ஆற்காடு ஆகிய தொகுதிகளில் குறைந்தபட்சமாக 8 பேரும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியானதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலில் அகர வரிசைப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் பெயர்களும், அதைத் தொடர்ந்து பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களின் பெயர்களும் அதன்பின்னர் சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்களும் இடம் பெறும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் 234 தொகுதிகளிலும், இறுதி வேட்பாளர் பட்டியல் நகல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
English Summary: Tamil Nadu Assembly elections. The final candidate list released.