சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்தது. இந்நிலையில் வெள்ள நீர் இன்னும் ஒருசில இடங்களில் வடியாத காரணத்தால் மின்சார வாரிய ஊழியர்கள் ஒருசில வீடுகளுக்கு சென்று மின் கணக்கீட்டினை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மின் கணக்கீடு எடுக்கப்படாத வீடுகளில் உள்ளவர்கள் முந்தைய மாதத்தின் 50% கட்டணத்தை மட்டும் கட்டினால் போதுமானது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:-
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் கட்டணத்தை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் அடுத்தாண்டு ஜனவரி 31-ந்தேதி வரை எவ்வித அபராதமும் இல்லாமல் செலுத்தலாம் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் மின் கணக்கீட்டாளர்கள் வீடுகளுக்கு சென்று, அங்கு மின் மீட்டரை பார்த்து கணக்கீட்டினை அளவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் முந்தைய மாத மின் கட்டணத்தையே கோருவதாகவும் செய்திகள் வெளியானது.
வீடுகளில் உள்ள மின் மீட்டரில் என்ன அளவு உள்ளதோ, அதன் அடிப்படையிலேயே மின் கட்டணத்தை செலுத்தலாம். ஒருவேளை கணக்கீட்டாளர்கள் மின் மீட்டரை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுமானால், முந்தைய மாத கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்தவகையில் 4 மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கான மின் கட்டணத்தை ஜனவரி 31-ந்தேதி வரை அபராதமின்றி செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English summary-Tamil Nadu Generation and Distribution Corporation note on actual charges