காற்றாலை, சூரியசக்தி மூலம் ரூ.720 கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை கூடுதலாக எடுத்துச் செல்வதற்காக பசுமைவழித் தடத்தின் (கிரீன் காரிடார்) 2-ம் கட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டம் சமூக ரங்கபுரத்தில் 400 கிலோ வோல்ட் திறன், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், திருப்பூர் மாவட்டம் பூலவாடியில் தலா 230 கிலோ வோல்ட்திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இப்பணிகளை ரூ.720 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் கூடுதலாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.