‘தமிழகம், புதுச்சேரியில், நவம்பர், 1 முதல், மூன்று நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது’ என, தனியார் வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பருவமழை தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவக்காற்று துவங்கியுள்ளது. இன்னும் நான்கு நாட்களில், இந்த காற்று வலுப்பெற்று, மழையாக மாறும். வரும், 29ல், வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது, வட மேற்கில் நகர்ந்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், 30ம் தேதி முதல், கனமழையாக பெய்யும்.
இந்த மழை, வடகிழக்கு மாநிலங்களில் ஓயும் நிலையில், தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில், தொடர் மழை பெய்யும். வரும், 31ம் தேதி வரை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை இல்லை. இவ்வாறு, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதேநேரத்தில், ‘நவம்பர் முதல் வாரத்தில் மிதமாகவும், அதன்பின், இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யும்’ என, வானிலை மையத்தின் நீண்ட கால கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனியார் வானிலை ஆய்வு அமைப்பினர் வெளியிட்ட கணிப்பில், ‘வரும், 1ம் தேதி அதிகாலை முதல், 3ம் தேதி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், ராமேஸ்வரத்தில், 7 செ.மீ., மழை பதிவானது.