வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவியுள்ளது. நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் பிப்பர்ஜாய் நேற்று காலை 8.30 மணியளவில் வட-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கி.மீ தொலைவில் மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கி.மீ தொலைவில் போர்பந்தரில்(குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் நகரக்கூடும்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 10 முதல் 12 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். இதனால் பொதுமக்கள் அதிக நீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.