கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனைப் பிரிவு பணியாளர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு புதிய சீருடைகளை ஊழியர்களுக்கு வழங்கினார்.

கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு பணிபுரியும் விற்பனைப் பிரிவு ஊழியர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு சீருடைத் துணிகள் வழங்க கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2015-2016-ஆம் ஆண்டுக்கான புதிய வடிவமைப்பில் தயாரான சீருடைகளை அமைச்சர் கோகுல இந்திரா பணியாளர்களுக்கு வழங்கினார். தாற்காலிகப் பணியாளர்களுக்கு 2 செட் சீருடைகளும், நிரந்தரப் பணியாளர்களுக்கு 3 செட் சீருடைகளும் என மொத்தம் 1018 பேருக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், கைத்தறி, கைத்திறன், துணி நூல், கதர்த் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ், தலைவர் கே.வி.மனோகரன், துணைத் தலைவர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். வரும் தமிழ்ப் புத்தாண்டு தினம் முதல் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் புதிய சீருடையில் பணிக்கு வருவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : Tamil New Year’s First Co- optex new uniforms for employees