சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கன் நூலகத்தில் இதுவரை ஆங்கில புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக தமிழ் நூல்களுக்கான தனிப்பிரிவு ஒன்று நேற்று முதல் தொடங்கியது. இந்த பிரிவை பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவியரசர் வைரமுத்து தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணைதூதர் அலுவலகத்தில் இந்தியா சுதந்திரம் பெற்ற வருடமான 1947ஆம் ஆண்டில் இருந்து நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூலத்தில் சுமார் 15 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டிருந்தாலும் தமிழ் உள்பட இந்திய மொழிகளின் நூல்கள் எதுவும் வைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க ஆங்கில நூல்களுடன் செயல்பட்டு இதுவரை செயல்பட்டு வந்த இந்த நூலகத்தில் முதன் முறையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 200 நூல்கள் இடம் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்க துணைதூதர் பிலிப் மின் தலைமை தாங்கினார். துணைதூதர் அலுவலக பொது விவகார துறை அதிகாரி ஏரியல் பொல்லாக் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் இந்த விழாவில் பேசியவதாவது: அமெரிக்க துணைதூதர் அலுவலகத்தில் கடந்த 1947-ம் ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டது. இதுவரை இங்கு ஆங்கில நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. தற்போது முதன் முறையாக 200 தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு என்று தனிப்பிரிவு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நூல்களின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருந்தாலும் இது ஒரு தொடக்கம் தான். நம் நாட்டுக்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தாலும், அமெரிக்க நூலகத்தில் 2015ஆம் ஆண்டு தான் தமிழுக்கு சுதந்திரம் கிடைத்து உள்ளது. அனைவரும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பது என்பது ஒரு யோகமாகும். புத்தகம் என்பது நாம் வரம் பெற யாரோ செய்த தவமாகும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனேக நாடுகளில் மொழியே பிறக்காத நிலையில், நாம் அப்போதே இலக்கியங்களை படைத்துள்ளோம். எனவே பழமையான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட நம்முடைய பண்டைய இலக்கிய நூல்களின் எண்ணிக்கையை நூலகத்தில் அதிகரிப்பதுடன், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட செவ்வியல் இலக்கியங்களும் அமெரிக்காவில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

அமெரிக்க துணைத்தூதருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நூலகத்திற்கு என்னை அழைத்ததற்காக அல்ல, எனக்கு முன்பாக தமிழை அழைத்ததற்காக” இவ்வாறு வைரமுத்து பேசினார்.

மேலும் இந்த விழாவில் மார்டின் லூதர் கிங், ஜான் எப்.கென்னடி, பராக் ஓபாமா, பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், தொழிலதிபர்களின் வெற்றியின் ரகசியம் அடங்கிய நூல்களை பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

English Summary : Tamil Novel section was opened for the first time in American consulate Library at Anna Saalai Chennai.