கொடைக்கானல் ரோடு நிறுத்தத்திற்கு மாற்றாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜாஸ் ரயில் நின்று செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ரோடு (கொடைரோடு) மற்றும் திருச்சி ஆகிய 2 ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்கிறது. பிற்பகல் 3 மணிக்கு மதுரையில் புறப்படும் இந்த ரயில், 6 மணி 30 நிமிடங்களில் சென்னையை சென்றடைகிறது. 13 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், 12 பெட்டிகள் 3 அடுக்குப் பெட்டிகளாகவும், ஒன்று சிறப்புப் பெட்டியாகவும் உள்ளது. அனைத்து பெட்டிகளும் குளிரூட்டப்பட்டுள்ளன.
இந்த ரயில் பயணிகளுக்கான கட்டணம் இரு நிலைகளில் வசூலிக்கப்படுகிறது. கொடைரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்ல சிறப்பு பெட்டிக்கு ரூ.1,830 வீதமும், 3 அடுக்கு பெட்டிக்கு ரூ.840 வீதமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில், உணவு தேவைப்படும் சிறப்பு பெட்டி பயணிகளிடம் ரூ.2,185 வீதமும், 3 அடுக்கு பெட்டி பயணிகளுக்கு ரூ.1,140 வீதமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்கு செல்ல சொகுசு பேருந்துகளில் ரூ.700க்கும் கூடுதலாக வசூலிக்கப்படும் நிலையில், தேஜாஸ் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்த நிலையிலுள்ள திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜாஸ் ரயில் நிறுத்தப்படாதது, ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில், கொடைரோடு ரயில் நிலையத்திலிருந்து 20 பயணிகள் சராசரியாக தேஜாஸ் ரயிலில் ஏறுகின்றனர். அதில், 15 முதல் 17 பேர் வரை திண்டுக்கல் பகுதியிலிருந்து செல்கின்றனர். திண்டுக்கல்லிலிருந்து 27 கி.மீட்டர் தொலைவிலுள்ள கொடைரோடு ரயில் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ரயில் ஏற வேண்டிய கட்டாயம் இருப்பதால், தேஜாஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ரயில் பயணி சுதர்சன் கூறியது: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜாஸ் ரயில் நிறுத்தப்பட்டால், திண்டுக்கல் மட்டுமின்றி, பழனி, வேடசந்தூர், தேனி மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். திண்டுக்கல்லிலிருந்து கொடைரோட்டிற்கு செல்ல 30 நிமிடங்கள் பயண நேரம் மட்டுமின்றி, பேருந்து கட்டணமும் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.
இந்த தேஜாஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுமானால், கூடுதலான பயணிகள் பயன் பெற வாய்ப்பு ஏற்படும் என்றார். ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: மதுரை- சென்னை இடையே தேஜாஸ் ரயில் இயக்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றபோது, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்க வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்தே கொடைக்கானல் செல்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படாததால், கொடைக்கானல்ரோடு தேஜாஸ் ரயில் நிறுத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல்ரோடு நிலையத்தில் நிறுத்தப்படும் தேஜாஸ் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து செல்லும்போது 10 முதல் 15 கி.மீட்டர் வேகத்திலேயே இயக்கப்படுகிறது.
அதேநேரத்தில், 100 கி.மீட்டர் வேகத்திற்கும் கூடுதலாக இயக்கப்படும் தேஜாஸ் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுமானால், கொடைக்கானல் ரோடு நிலையத்தை 100 கி.மீட்டர் வேகத்தில் கடக்க முடியும். இதன் மூலம் ரயில் மதுரையிலிருந்து திண்டுக்கல் வரை ஒரே வேகத்தில் வந்து சேரும். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து, ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும் என்றார்.