பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது: ஜூன், ஜூலையில் பத்தாம் வகுப்பு அரசு சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெறலாம். http://www.dge.tn.nic என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஜூலை 31 மற்றும் ஆக. 1 ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இரு தாள்கள் கொண்ட மொழிப்பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205, விருப்ப மொழிப்பாடத்திற்கு ரூ.205 என கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவை அறிய முடியும். எனவே சீட்டை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.