பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதியவர்களுக்கு மறுகூட்டல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன. இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வினை மொத்தம் 24,362 மாணவர்கள் எழுதினர்.
இதையடுத்து மறுகூட்டலுக்கு 203 பேர் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 1,179 ஆகும். இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 4 ஆகும்.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை முற்பகல் வெளியிடப்படும். மதிப்பெண் கூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.
தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களைப் பதிந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வெள்ளிக்கிழமை முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.