குரூப் 1 தேர்வின் மூலம் துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி வணிக வரித்துறை அலுவலர், மாவட்ட பதிவாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கான 74 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாகவும் இந்த பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்ந்து எடுத்து கொடுக்கும் பொறுப்பை தமிழக அரசு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதன் அடிப்படையில் சிவில் நீதிபதிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி.கள், உதவி வணிக வரித்துறை அலுவலர்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள், வருவாய் உதவியாளர்கள், பதிவாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.
துணை கலெக்டர் பணியிடங்கள்- 19, துணை சூப்பிரண்டு பணியிடங்கள்- 26, உதவி வணிக வரித்துறை அலுவலர்கள் பணியிடங்கள்- 21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களுக்கு இந்த தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. முதல்நிலை தேர்வு, பின்னர் மெயின் தேர்வு என இரண்டு பகுதிகளாக நடைபெறும் இந்த தேர்வில் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இம்மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெறுபவர்களின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 மெயின் தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் நடத்தியது. இப்பதவிகளுக்கான நேர்காணல் வரும் 15ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 2ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நேர்காணல் நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புகடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு தபால் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary:The announcement of the Group 1 select cadre of 74 , including sub- collector