மதுரையில் ஒரு திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிவக்குமார் செல்பி எடுத்த இளைஞரின் செல்ஃபோனை வேகமாக தட்டிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், சிவகுமாரை பலர் விமர்சித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்த சிவக்குமார் “ ஒரு பொதுஇடத்தில், 200, 300 பேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், காரில் இருந்து இறங்க ஆரம்பித்து மண்டபத்துக்குப் போவதற்கு முன்னாடியே, பாதுகாப்புக்கு வரக்கூடிய ஆட்களையெல்லாம் கூட ஓரங்கட்டிவிட்டு, இருபது முப்பது பேர், செல்போனை கையில் வைத்துக்கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்று நடக்கவே விடாமல் பண்ணுவது, நியாயமா? யோசித்துப் பாருங்கள். அடுத்தவர்களை நாம் எந்த அளவுக்குத் துன்புறுத்துகிறோம் என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும்” எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ள சிவக்குமார் “ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வார்கள்..ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்..
என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்கு உளப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்