சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: இந்திய பெருங்கடலின் நில நடுக்கோட்டு பகுதி மற்றும் குமரிக்கடல் இடையே நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. தெலங்கானாவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வுநிலை குமரிக்கடல் வரை, தமிழகத்தின் உட் பகுதி வழியாக நிலவுகிறது.
இதன் காரணமாக தென் கடலோர தமிழக பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னர் மற்றும் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் தலா 4 செமீ, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 செமீ, நெல்லை மாவட்டம் ஆய்க்குடி, சேலம் மாவட்டம் ஏற்காடு, சங்ககிரி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.