சென்னை: ”மெட்ரோ ரயில் பகுதிகளில், கட்டட பணிகளை மேற்கொள்ள, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், தடையில்லா சான்று பெற வேண்டியது கட்டாயம்,” என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், ஹர்தீப் எஸ்.பூரி கூறினார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த, மண்டல கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், ஹர்தீப் எஸ்.பூரி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக, ‘ரியல் எஸ்டேட்’ ஒழுங்குமுறை ஆணைய தலைவர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஹர்தீப் எஸ்.பூரி பேசியதாவது: ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, உரிய ஒப்பந்தப்படி, கட்டுமான நிறுவனங்கள், வீடுகள் கட்டி தருவதற்கு, அரசு பாதுகாப்பு வழங்குகிறது. அதற்காகவே, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது .இந்த சட்டத்தை, தமிழகம் உள்பட சில மாநிலங்கள், இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. மத்திய அரசின் சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும், மாநில அரசின் சட்டத்தில் சேர்த்தால் மட்டுமே, சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். இந்த சட்டப்படி, நாடு முழுவதும், 32 ஆயிரத்து, 500 கட்டுமான திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 25 ஆயிரம், ரியல் எஸ்டேட் முகவர்களும் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு துறைகளுக்கு சொந்தமான, பயன்படுத்தப்படாத மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்டு, அவற்றை பயன்படுத்துவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிகளை துவங்கும் பொறுப்பு, ‘ஜைகா’ நிறுவனத்திடம் உள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதன் பாதைகளை சுற்றி, 18 மீட்டர் பரப்பில், புதிய கட்டட பணிகளை மேற்கொள்ள, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், தடையில்லா சான்று பெற வேண்டும்; இது, கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.
தளப்பரப்பு அதிகரிப்பு! துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: நகரமயமாதலில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. எனவே, வீட்டுவசதி தொடர்பாக, கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வீடு கட்டுவதற்கான தளப் பரப்பு என்ற, எப்.எஸ்.ஐ., அளவு, 1.5ல் இருந்து, இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள், விரைவில் வெளியிடப்படும். அனைவருக்கும் வீடு திட்டத்தில், 13.91 லட்சம் குடும்பங்களுக்கு, வீடுகள் தேவை. இதில், 4.88 லட்சம் குடும்பங்களுக்கு, வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள், கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர். அவர்களுக்கு, மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டத்தை, தேசிய வீட்டுவசதி வங்கி வழங்க வேண்டும்