admission_anna_universityதமிழகத்தில் மே 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தலும், அதனையடுத்து மே 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருப்பதால் அதற்கு முன்னரே 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவிருப்பதாகவும், அதேபோல் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே அதாவது ஏப்ரல் இறுதி வாரத்திலேயே வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் 575-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் பிஇ, பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) கவுன்சிலிங் நடத்தி அதன் மூலம் இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஒற்றைச்சாளர முறையின்படி, மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்ளுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேயொரு விண்ணப்பம் அனுப்பினால் மட்டுமே போதுமானது.

கவுன்சிலிங் போது மாணவர்கள் தங்களுக்கு இஷ்டமான கல்லூரியை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படும்.

வழக்கமாக பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும். அதனை அடுத்து ஜூன், ஜூலை மாதங்களில் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் மற்றும் அது தொடர்பான பணிகள் காரணமாக, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே அதாவது ஏப்ரல் கடைசி வாரத்திலேயே வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

வழக்கமான நாளை விட இரண்டு வாரங்களுக்கு முன்னரே விண்ணப்பம் வழங்கினால், மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது உள்ளிட்ட மாணவர் சேர்க்கை தொடர்பான நடைமுறைகளை முன்கூட்டியே முடித்துவிடலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக் கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே மாணவர்களும் பெற்றோர்களும் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை பெற ஏப்ரல் கடைசி வாரத்திலேயே தயாராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

English Summary: The election is due in the last week of April Application for engineering studies. Anna University. Program