தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வ தேர்தல் தேதி வரும் மே மாதம் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக
அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஒருசில அரசியல் கட்சிகள் விளம்பர பலகைகளை அகற்றிய போதிலும் மீதியிருந்த விளம்பர பலகையை சென்னை மாநகராட்சியே அகற்றியது. இவ்வாறு அகற்றப்பட்ட விளம்பர பலகைகளின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 13,000ஐ தாண்டிவிட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டபேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மார்ச் 7-ஆம் தேதி வரை அரசு கட்டடங்கள், சுவர்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த 9,223 சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள், சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் தனியாருக்குச் சொந்தமான சுவர்களில் வரையப்பட்டிருந்த 4,169 விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: The Elimination of the 13,000 Billboard in Chennai.