தமிழகத்தில் வீசிய, ‘கஜா’ புயலில் தான், அதிகளவிற்கு, மின் சாதனங்கள் சேதமடைந்து உள்ளதாக, மத்திய குழுவிடம், மின் வாரியம் தெரிவித்துள்ளது.
புயல் சேதத்தில் மின் வாரியம்: தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், ‘கஜா’ புயலால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அம்மாவட்டங்களில் இருந்த, லட்சத்திற்கும் அதிகமான, மின் கம்பம் உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அரசின் அதிகாரிகள் குழு, பார்வையிட்டு வருகிறது.
ரூ.2.88 கோடி: அந்த குழுவிடம், ‘கஜா’ புயலில் தான், அதிகளவிற்கு மின் சாதனங்கள் சேதம்அடைந்து உள்ளதாக, மின் வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர்கூறியதாவது:தமிழகத்தில், மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது. மின் வினியோக பணிகளை மேற்கொள்ளும், மின் பகிர்மான கழகத்தை போல், நாடு முழுவதும், 41 மின் வினியோக நிறுவனங்கள் உள்ளன.அதன்படி பார்த்தால், தமிழகத்தில், மின் பகிர்மான கழகத்திற்கு தான், 2.88 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். கடலுாரில், 2011ல் வீசிய, ‘தானே’ புயலின் போது, 50 ஆயிரம் மின் கம்பங்கள்
சேதமடைந்தன.
ஆதாரங்கள்: சென்னை மற்றும் புறநகரில், 2016ல் வீசிய, ‘வர்தா’ புயலின் போது, 29 ஆயிரத்து, 907; ‘ஒக்கி’ புயலில், 15 ஆயிரத்து, 858 மின் கம்பங்களும் சேதமடைந்தன.கஜா புயலால், தஞ்சை, நாகை உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள்; 17 ஆயிரம் கி.மீ., மின் கம்பி; 1,000க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதம்அடைந்து உள்ளன.இவற்றை சீரமைக்கும் பணியில், 25 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, எந்த மாநிலத்திலும், மின் வினியோக நிறுவனத்திற்கு, புயலால் இந்த அளவிற்கு, மின் சாதனங்கள் சேதம் ஏற்பட்டதில்லை. இந்த விபரங்கள் அனைத்தும், புகைப்பட ஆதாரங்களுடன், மத்திய குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன