கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கஜா புயல் வேகம் அதிகரித்து 23 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் காலை வரை மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது இது 23 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னைக்கு 338 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 328 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும். இன்று மாலை அல்லது இரவு பாம்பன் – கடலூருக்கு இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கஜா புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மாலை அல்லது இரவு கரையை கடக்கும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை, தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்று பரவலாக வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கஜா புயலின் எதிரொலியாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூரில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது. ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு நாகை மாவட்டத்திற்கு வந்துள்ளது.