தமிழக அரசின் திட்டங்களில் மிகவும் முக்கியமானது ‘மழை நீர் சேகரிப்பு திட்டம்’ இந்த திட்டத்திற்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தது. தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக இந்த திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சென்னையில் புதுமையான முறையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை நகரின் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீரின் தரத்தை மாதந்தோறும் 145 கிணறுகள் மூலம் சென்னை குடிநீர் வாரியம் கண்காணித்து வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் அளவிடப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளவிடப்பட்ட நிலத்தடி நீர்மட்டத்தை விட 0.80 மீட்டர் உயர்ந்து இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மழை அளவு குறைவாக இருந்த போதிலும், தற்போது சென்னை நகரின் கிணறுகளில் கடந்த ஆண்டுகளை விட நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதற்கு, சென்னை நகரில் உள்ள வீடுகளில் ஏற்படுத்தி உள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் மற்றும் அதனை திறம்பட பராமரித்ததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு சென்னை குடிநீர் வாரியம் மழை நீரை சேகரிக்க புதுமையான முறையை கையாள உள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மண்ணின் தன்மைக்கேற்ப வீட்டின் மேற்கூரை, மொட்டை மாடிகள் வழியாக குழாய் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு வீட்டின் பால்கனி, சுற்றுப்புறம் ஆகிய இடங்களிலும் தண்ணீரை சேமிக்கும் வகையிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளவர்கள் அதனை நல்லமுறையில் பராமரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மழைநீர் கட்டமைப்பு இல்லாத வீடுகளின் உரிமையாளர்கள் அதனை உடனடியாக உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சில தினங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளவர்கள் மொட்டை மாடியை சுத்தப்படுத்த வேண்டும், மழைநீர் வடிகுழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரி செய்ய வேண்டும், வடிகட்டும் தொட்டி- கழிவுநீர் குழாயில் உள்ள கூழாங்கல்-கருங்கல் ஜல்லியை சுத்தம் செய்து நிரப்ப வேண்டும், கட்டமைப்புகளின் உள்ளே மழைநீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும், சேமிப்பு கிணற்றில் உள்ள கசடுகளை அகற்ற வேண்டும் என்பது மிக அவசியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மண்ணின் தன்மைக்கேற்ப அமைக்க வேண்டிய மழைநீர் சேகரிப்பு முறைகள்:-
மணற்பாங்கான பகுதியில் (தண்டையார்பேட்டை, சவுகார்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் உள்பட இடங்கள்) கசிவு நீர்க்குழி, நீரூட்டல் கிணறு வழியாகவும், களிமண்பாங்கான பகுதியில்(கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், பெரம்பூர், எழும்பூர், தியாகராயர்நகர், கே.கே.நகர், கோயம்பேடு உள்பட இடங்கள்) துளையுள்ள கசிவுநீர்க் குழி, நீரூட்டல் கிணறு வழியாகவும், பாறைகள் உள்ள பகுதியில்(சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்பட இடங்கள்) கசிவு நீர்க்குழி, நீரூட்டல் கிணறு வழியாகவும் மழைநீர் சேகரிப்பு முறை கையாள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:The innovative system to collect rain water.Chennai Drinking Water Board decided.