வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை அறிவித்தது. எனவே, ரிசர்வ் வங்கிகளிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதமாகத் தொடரும். அதேபோல் வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25 சதவீதமாகவே நீடிக்கும்.
மும்பையில், ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இப்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி அதிகரிக்காமல் இப்போதைய நிலையிலேயே தொடரும். அதே நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வங்கிகள் பெறும் நிரந்தர வைப்பு உள்ளிட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டியும் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
கூட்டத்துக்குப் பிறகு ஆர்பிஐ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நுகர்வோர் விலைக் குறியீட்டு எண், பணவீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இப்போதைய வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்ற முடிவை ஆர்பிஐ எடுத்துள்ளது. ஆர்பிஐ நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். 2019-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும். 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்க விகிதம் 2.7 சதவீதம் முதல் 3.2 சதவீதம் வரை இருக்கும் என்று ஆர்பிஐ ஏற்கெனவே கணித்திருந்தது. அதே அளவில்தான் பணவீக்கமும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆர்பிஐ நிதிக் குழு கூட்டத்தில் வட்டி விகிதம் கடைசியாக உயர்த்தப்பட்டது. அப்போது, வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. கடந்த ஜூன் மாதம் ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரெட் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு சுமார் நான்கரை ஆண்டுகளாக வட்டி விகிதம் உயர்த்தப்படாமலேயே இருந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு, வட்டி விகிதம் தொடர்ந்து 6 முறை குறைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி வெகுவாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.