தமிழக அரசு சமீபத்தில் தொடங்கிய இ–சேவை மையங்களில் ஆதார் அட்டை பெறுதல், பாஸ்போர்ட் சரி பார்த்தல் உள்பட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக மின்கட்டணம் செலுத்துதல் உள்பட மேலும் ஒருசில சேவைகளை நீட்டித்துள்ளது. மேலும் இந்த இந்த சேவை தகவல்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் இ-சேவை மையங்களில் வருவாய்த் துறையின் சேவைகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி இம்மையங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களான ஆதார் அட்டை பெறுதல், பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கான நாள் மற்றும் நேரம் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய சேவைகளும் இம்மையங்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் இம்மையத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும் தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள அரசு இ-சேவை மையம் தொடர்பான தகவல்களை செல்பேசியில் தெரிந்து கொள்கின்ற வகையில் டி.ஏ.சி. டி.வி. என்ற பெயரில் செல்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டில் இயங்கும் செல்பேசிகளில் மட்டுமே செயல்படும். இந்த செல்பேசி செயலியை பொதுமக்கள் கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இச்செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இ-சேவை மையங்களின் முகவரி, வரைபடம், அருகாமையில் இருக்கும் மையத்திற்கு செல்லும் வழி, இம்மையங்களில் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பான தகவல்களையும் அரசின் சேவைகளைப் பெறுவதற்காக அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்திருந்தால் அதன் தற்போதைய நிலையையும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary: The introduction of the e-service of the Tamilnadu of the new processor.