சென்னை: கஜா 2-ம் இல்லை, கஜா – 3-ம் இல்லை.. எல்லாமே வெறும் புரளி என்றும் ஆனால் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
கஜா புயலுக்கு முன்னும், பின்னும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. கஜா புயலுக்கு அடுத்து டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது.
கஜா கடந்த உடனேயே அடுத்து ஒரு புயல் வரப்போகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே இந்த நிலையில் வங்க கடலில் போன 18-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும் இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
புயல் இல்லை உள் தமிழகத்தில் மழை:
கஜா மீள்வதற்குள் இன்னொரு புயலா என தமிழகமே மிரண்டது. ஆனால் தற்போது வானிலை ஆய்வு மையம், தெரிவிக்கும்போது, “தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலைகொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வட தமிழகத்தின் வழியாக உள்ளே வந்து, உள் தமிழகத்தில் கடந்து செல்ல இருக்கிறது.
இன்று நாளை மழை 7 மாவட்டங்களில் கனமழை:
இதனால் தமிழகத்தில் 22-ந்தேதி அதாவது இன்றும், நாளையும் மிதமாக மழை பெய்யும். குறிப்பாக வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
புரளிதான் புதுச்சேரியில் மழை:
கஜா-2, கஜா-3 என்று எதுவும் கிடையாது. எல்லாமே புரளிதான். அதற்கு வாய்ப்பும் இல்லை. புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டது.
கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை:
இவ்வாறு கன மழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து விட்டார்கள். அதேபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.