பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு முகாமில் சுமார் 1,500 பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு, சுகாதாரம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதையொட்டி, புகையில்லா போகி பண்டிகை எனும் கருத்தை வலியுறுத்தி கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட தியாகராய நகர் ஆர்.கே.எம். சாரதா வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், போகி பண்டிகையின்போது, டயர், டியூப், பிளாஸ்டிக் பொருள்கள், இதரப் பொருள்களை எரிப்பதாலும், பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதினால் ஏற்படும் சுற்றுச்சூழல், உடல் நல பாதிப்புகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு 1,500 மாணவிகள் புகையில்லா போகி, பிளாஸ்டிக் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.