சென்னை: இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாலேயே கனமான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தையே நாசம் செய்த கஜா புயல் வங்கக் கடலில் உருவானது. பிறகு அது நகர்ந்து தற்போது அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
அடுத்தடுத்த புயல்கள்: கஜாவை தொடர்ந்து அடுத்தடுத்த புயல்கள் வர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த 16ம் தேதி வங்கக்கடலில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவானதாகவும் கூறப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அது மெல்ல மெல்ல வலுப்பெற்று தற்போது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அந்த காற்றழுத்தம் இப்போது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு தென்கிழக்கு பகுதியிலும், இலங்கைக்கு வடமேற்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.
சென்னைக்கு மழை: இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரக்கூடும். இதனால் டெல்டா பகுதியில் இருந்து சென்னை வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நாளை, நகர்ந்து புதுச்சேரி மற்றும் சென்னை கடலோரப் பகுதிக்கு வரக்கூடும்.
28-ம் தேதி வரை நீடிப்பு: இதன் காரணமாகவும் பலத்த மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், புதுச்சேரி, கடலூர் பகுதியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வருகிற 28ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இதனிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், அவ்வாறு மாறும் பட்சத்தில் தமிழகத்தில் பலமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தப்புமா சென்னை?: கஜா புயலில் இருந்து தப்பித்துகொண்ட சென்னை, அடுத்து வரப்போகும் பலத்த மழையில் சிக்க உள்ளது. ஆனால் அடுத்தடுத்து வரப்போகும் புயல், மழை சம்பந்தமாக ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தபடியே இருந்ததால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் 28-ம் தேதிவரை பலத்த மழை இருக்கும் என்று சொல்லப்பட்டு விட்டதால் சென்னைவாசிகளுக்கு இப்போதே பீதி ஆரம்பித்துவிட்டது.