சென்னை: வரும் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் வெயில் கொளுத்தும்; வறண்ட வானிலை நிலவும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் தீவிரமாகியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் கடலோர பகுதி அல்லாத உள் மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. கடலோர மாவட்டங்களில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று வீசுவதால் வெயிலின் தன்மை மற்ற மாவட்டங்களை விட குறைவாக உள்ளது.
இதற்கிடையில், அதிக வெயில் கொளுத்தும் மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் திடீர் மழையும் பெய்கிறது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
வத்திராயிருப்பு 3; கோத்தகிரி போடி கொடைக்கானல் பேச்சிப்பாறை 2; பெரியகுளம் குன்னுார் உத்தமபாளையம் வால்பாறை ஆய்க்குடி ராஜபாளையம் தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை 5:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் 39 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் 33; விமான நிலையம் 35 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.
அடுத்த நான்கு நாட்களை பொருத்தவரை கடலோர பகுதி உள்பட அனைத்து மாவட்டங்களிலும்வறண்ட வானிலை நிலவும் வெயில் கொளுத்தும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.