இந்தியாவிலேயே முதல்முறையாக ராணுவ படை வீரர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக ராணுவ ஆள்சேர்ப்பு மைய அதிகாரி கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவைக்கான ராணுவ ஆள்சேர்ப்பு மைய அதிகாரி கர்னல் அவினாஷ் டி.பித்ரே, இதுகுறித்து சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ராணுவத்தில் படை வீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் செப்டம்பர் 4 முதல் 13-ம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
750 வீரர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற உள்ள இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்று பணியில் சேருபவர்களுக்கு ரூ.23 ஆயிரம் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். இதைத் தவிர, இலவச தங்கும் இடவசதி, ரேஷன், சீருடைகள் ஆகியவை வழங்கப்படும். மேலும், 15 ஆண்டுகள் பணியாற்றியபிறகு ஓய்வூதியம் பெற தகுதி பெறுவர்.
நாட்டிலேயே முதன்முறையாக ‘ஆன்-லைன்’ மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.joinindianarmy.nic.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19. விண்ணப்பப் படிவம் தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இடம் பெற்றிருக்கும். ஆன்-லைனில் விண்ணப்பித்த உடன் அவர்களுக்கு தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இணைய வசதி கொண்ட அலைபேசியிலோ அல்லது இன்டர்நெட் மையங்கள், இ-சேவை மையங்கள், மத்திய அரசின் பொது சேவை மையங்கள், ராணுவ ஆள்சேர்ப்பு மையங்கள், மண்டல ஆள்சேர்ப்பு மையங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்றோ ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் கண்டறிய Army Calling என்ற ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப்ஸில் உள்ள தகவல்கள் தென்னிந்திய மொழிகளில் இடம் பெற்றுள்ளன. இப்புதிய நடைமுறை மூலம் ஆள்சேர்ப்பு தினத்தன்று கூட்ட நெரிசலை குறைக்க முடிவதோடு, வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யும் நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் ஏமாறும் நிலையையும் தடுக்க முடியும்.
இவ்வாறு கர்னல் அவினாஷ் டி.பித்ரே கூறினார்.
English Summary: The system introduced for the first time applying Army by online