சென்னை: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்துள்ளதால், இன்று முதல், 9ம் தேதி வரை, தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை, தெற்கு கடலோர மாவட்டங்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கேரள பகுதிகளில் தீவிரமாகியுள்ளது. வங்க கடலில், இலங்கைக்கு வடக்கே, மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை, இரண்டு நாட்களாக நீடித்தது. இது, நேற்று முன்தினம் நள்ளிரவில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் ஆகியுள்ளதால், இன்று முதல், 9ம் தேதி வரை, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகை முதல், கன்னியாகுமரி வரையிலான கடலோர பகுதிகளுக்கு, முதற்கட்டமாக மழை பரவும் என்றும், அதன்பின், கடலோரத்துக்கு தொலைவில் உள்ள, தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
‘வங்க கடலில், நாகை முதல் குமரி வரையிலான பகுதிகளில், கடல் சீற்றத்துடன் காணப்படும்; அலைகள் உயரமாக எழும்பும். மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளில், நாளை மறுநாள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என, சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், திருசெந்துாரில், 2 செ.மீ., ராமநாதபுரம், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.