சென்னை : ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள, அரசு மருத்துவமனைகளில், ஸ்கேன் எடுக்க வருவோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம்’ என, டாக்டர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கஜா புயல் தாக்கியதில், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேரிடரால் வீடுகள் உடைமைகளை இழந்தவர்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடுகின்றனர். புயல் தாக்கியதில் வீடு இடிந்து விழுந்தது, மரம் விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது.
சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைக்கான குறைந்தபட்ச கட்டணம் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், பலரும் உரிய சிகிச்சை பெற முடியாமல் திரும்பும் நிலை உள்ளது. இதையடுத்து புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில், ஸ்கேன் எடுக்க வருவோரிடம் டிச., 15 வரை, கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது என மருத்துவமனை நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.