தமிழகத்தில் வரும் 4-ஆம் தேதி போலியோ மூன்றாவது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.

போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும், முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 12 மாதங்களுக்குள் 3-ம் தவணையாக போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும்.” என்று அவர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *