திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சகணக்கான பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.