திபெத் நாட்டின் புத்தமத தலைவர் தலாய்லாமா, கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் லட்சிய இந்தியா இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐந்து பேர்களுக்கு சேவ ரத்னா விருதுகளை தலாய்லாமா வழங்கினார். மரம் வளர்ப்பு, ஊரணிக்கு உயிர் கொடுப்போம், தூய்மையான குடிநீர் வழங்குவோம், பசுமை கிராம கட்டமைப்பு, மது மறுவாழ்வு பணி ஆகிய 5 தலைப்புகளின் கீழ் ஐந்து பேர் தலாய்லாமாவிடம் விருது பெற்றனர். பின்னர் பேசிய தலாய்லாமா, ‘மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மத ரீதியிலான மோதல்கள் குறைவாக இருந்தாலும், 100 சதவிகிதம் அமைதியாக இல்லை. அப்துல் கலாம் கூறியதுபோல், இந்திய இளைஞர்கள் அனைவரும் லட்சியக் கனவு காண வேண்டும் என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் அவர் சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். ஐ.ஐ.டியில் அவர் பேசியதாவது, கடந்த நூற்றாண்டு மிக அதிக வன்முறைகளைக் கொண்ட நூற்றாண்டாக இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது. வன்முறை என்பது ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தங்களுக்குப் பிடிக்காத கொள்கை கொண்டவர்களை அப்புறப்படுத்துவது என்பது ஏற்கக்கூடியதல்ல. உங்கள் கருத்துக்கு எதிரான அனைவரையும் அகற்றிவிடுவது என்பது சாத்தியமானது அல்ல. மத நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விஷயம்.
இந்த உலகில் உள்ள 700 கோடி மக்களில், 100 கோடி மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே. அவர்களையும் மதிக்க வேண்டியது அவசியம். அனைத்து மதத்தினரையும், மத நம்பிக்கை இல்லாதவர்களையும் சேர்த்து மதிப்பதே உண்மையான மதச்சார்பின்மை.
மதச்சார்பின்மைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் வாழ்கின்றனர். திபெத்திலிருந்து இந்தியாவுக்கு முதன் முதலில் நான் வந்தபோது எனக்கு வயது 24. இப்போது 80 வயதாகிறது. அதன்படி, இந்திய அரசுக்கு மிக நீண்ட விருந்தாளியாக நான் இருந்து வருகிறேன்.
பல நேரங்களில் நான் தலாய்லாமா என்பதை விட, சாதாரண மனிதனாக உணர்கிறேன். என் தாய்தான் எனக்கு முதல் “ரோல் மாடல்’.
அவரது முகத்தில் நான் கோபத்தை பார்த்ததே இல்லை. உலகிலுள்ள பெரும்பாலான அம்மாக்கள் என் அம்மாவைப் போல் கோபமில்லாத, இரக்க குணம் கொண்டவர்கள். எனக்குப் பின், பெண் ஒருவர் தலாய்லாமாவாக வர வாய்ப்புள்ளது. ஆனால், அவர் கண்டிப்பாக அழகானவராக, மற்றவர்களை கவரக்கூடியவராக இருக்க வேண்டும். இதை நான் பல முறை சொல்லியிருக்கிறேன்.
இவ்வாறு தலாய்லாமா பேசினார்.
English summary-Tibetan spiritual leader the Dalai Lama speaks in IIT chennai