சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெறித்து வருகிறது. இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கடுமையான வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் வரவுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கடுமையான வெயிலில் வாகங்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றது. கோடையில் நமது வாகனங்களை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

1. சூடான சாலையில் காற்றழுத்தம் அதிகமாக உள்ள டயர் உராயும் போது காற்றில் உள்ள மூலக்கூறுகள் விரிவடைந்து டயர்கள் வெடிக்கின்றன. காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது சாலை வெப்பத்தால் டயர் பட்டன்கள் விரைவில் தேய்ந்து வெடிக்கிறது. இதனால் டயர்களில் காற்றழுத்தம் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

2. நல்ல நிலையில் உள்ள டயர்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். நூல் தெரியுமளவு இருந்தாலோ, பட்டன் இல்லாமல் இருந்தாலோ அந்த டயர்களை பயன்படுத் தக்கூடாது. வெயில் காலத்தில் வாகனங்களை அதிக வேகமாக இயக்குவதும், அதிக தூரம் இயக்குவதும் ஆபத்தானது. காலை, மாலையில் வாகனங்களை இயக்குவது நல்லது. டயர்களில் காற்று நிரப்பும்போது சாதாரண காற்றைவிட நைட்ரஜன் (என்2) காற்றை நிரப்பலாம். நைட்ரஜன் காற்று சாதாரண காற்றைவிட எளிதில் வெப்பமாவதும், ஆவியாவதும் இல்லை.

3. வெயில் காலத்தில் என்ஜின் அதிகமாக சூடாகும். அப்போது ரேடியேட்டரில் நீர் விரைவில் ஆவியாகி காலியாகும். அதிக சூடு காரணமாக என்ஜின் செயலிழக்கும். இதனால் ரேடியேட்டரில் நீருக்குப் பதிலாக ‘கூலண்ட்’ ஊற்றி வெப்பத்தை குறைக்கலாம். பெட்ரோல்/ டீசல் முழுவதும் நிரப்பக்கூடாது. எரிபொருள் மூலக்கூறுகள் விரிவடைந்து வெடித்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எரிபொருள் நிரப்பும்போது என்ஜினை நிறுத்திவிட வேண்டும்.

4. முக்கியமாக செல்போன்களை பெட்ரோல் டாங்க் கவரில் வைக்கக்கூடாது. செல்போன் சூடாகி பேட்டரி மற்றும் காற்றலையால் வரும் கதிர்வீச்சு காரணமாக தீ விபத்து நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வானிலை தட்பவெப்பநிலை, சாலையின் தன்மைக்கேற்ப வாகனத்தை நல்ல முறையில் பராமரித்து, மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் போது விபத்துகள் குறையும்

5. ஓட்டுநர்கள் கண்களைப் பாதுகாக்க கூலிங் கிளாஸ். கதர் ஆடைகளை அணிந்து காற்றோட்டமான சூழலில் வாகனங்களை இயக்க வேண்டும். நீர்சத்துள்ள பழங்களை உண்ண வேண்டும். பான்பராக், மதுப்பழக்கம், பீடா, புகையிலை, புகைப்பழக்கம் போன்ற போதை வஸ்துகளை உட்கொள்ளக் கூடாது. இவற்றை உட்கொள்வதால் ஏற்படும் மயக்கநிலை விபத்தை அதிகரிக்கும்.

6. எளிதில் தீப்பிடிக்கும் வாகனங்களை பகலில் இயக்குவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இலகுரக பயணிகள் வாகனங்களை மதிய நேரத்தில் இயக்கக்கூடாது. இந்த வாகனங்களில் அதிக நேரம் ஏசி இயங்குவதால் எரிபொருள் செலவுகள் அதிகமாகும். அடிக்கடி பிரேக் போடும்போது சூடான சாலையில் டயர் உராயும்போது விபத்து நிகழும். இவற்றை தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட ஆலோசனைகளின்படி நடந்தால் இந்த கோடையில் நமது வாகனங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

English Summary : Tips to maintain our Bike in Summer.