ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே அவ்வப்போது கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டணத்துடன் சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரெயில் ஆகஸ்ட் 5-ந் தேதி இரவு 9.05 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இதே போல் மறுமார்க்கமாக ஆகஸ்ட் 7ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு நெல்லையில் புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 4.15 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி நிலையங்களில் நின்று செல்லும். நெல்லையில் இருந்து வரும் சிறப்பு ரெயில் மட்டும் மாம்பலம் நிலையத்தில் நிற்கும்.
மேலும் சென்னை சென்ட்ரல்-எர்ணாகுளம் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 5-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. இதே போல் மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து 7-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்ட்ரல் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பலம், திரிச்சூர், அலுவா நிலையங்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிற்பபு கட்டண சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது. வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.
English summary:Tirunelveli to Chennai, Ernakulam, Velankanni special train