தேனாம்பேட்டை(டி.எம்.எஸ்.)-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வந்தன. இதில், இரண்டாவது வழித்தட பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. முதல் வழித்தடத்தில், தேனாம்பேட்டை(டி.எம்.எஸ்) -வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. தூரத்தில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் வரும் ஜனவரியில் மெட்ரோ ரயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: சென்னையில் ரூ.20,000 கோடி மதிப்பில் 44 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டத்தில் 34 கி.மீ. தூரம் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள தேனாம்பேட்டை-வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் தற்போது சிக்னல்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. இந்தப் பணிகள் முடிந்தபிறகு, டீசல் என்ஜின் மூலமாக சோதனை ஓட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, பாதுகாப்பு ஆணையர் அடுத்த மாதம் இறுதியில் ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. ஆய்வு முடிந்தபிறகு, ஜனவரி முதல் பாதியில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஜி-டி.எம்.எஸ். ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி. அரசினர் தோட்டம், சென்ட்ரல், உயர்நீதிமன்றம், மண்ணடி வழியாக வண்ணாரப்பேட்டையை வந்தடையும். இந்த ரயில் நிலையங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியதும் வண்ணாரப்பேட்டையில் இருந்து நேரடியாக விமான நிலையத்துக்கு பயணிக்க முடியும்.
கீழ் அடுக்கு, மேல் அடுக்கு என்று இரண்டு அடுக்குகளைக் கொண்ட சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையம் பயணிகளுக்கு பிரமிப்பை உருவாக்கும். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் அடுக்கில் எழும்பூரில் இருந்து வரும் ரயில்களும், இரண்டாவது அடுக்கில் ஏ.ஜி.-டி.எம்.எஸ். ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களும் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து அடுத்த ஆண்டு ஜூனில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.